search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானைகள் நடமாட்டம்"

    திருப்பதியில் தேவஸ்தானம் உருவாக்கியுள்ள சந்தன வனத்தில் 3 யானைகள் நடமாடுவதை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். #Elephantmovement
    திருமலை:

    திருப்பதியில் பாபவிநாசம் அருவிக்கு செல்லும் வழியில் உள்ள பார்வேட்டு மண்டபம் பகுதியில் தேவஸ்தானம் சந்தன மரங்களையும், செம்மரங்களையும் நட்டு பராமரித்து வருகிறது.

    ஏழுமலையானின் கைங்கரியத்துக்கு தேவையான சந்தன கட்டைகளை பெறுவதற்காக மரங்களை வளர்த்துள்ளனர்.

    இந்த நிலையில் சந்தன வனத்துக்கு பின்புறம் நள்ளிரவில் 3 யானைகள் நடமாடியதை வனத்துறையினர் கண்டறிந்தனர். அந்த யானைகள் சந்தன மரங்களின் நீர் பாசனத்துக்காக அமைக்கப்பட்ட தண்ணீர் குழாய்களை உடைத்து விட்டு சென்றுள்ளன.

    திருமலையில் இதுவரை யானைகள் இல்லை. தற்போது அவை கடப்பா மாவட்டத்திலிருந்து சேஷாசலம் வனப்பகுதி வழியாக திருமலைக்கு வந்துள்ளன. இதற்கு முன் யானைகள் கூட்டம் மலைச் சாலையின் நடுவில் வந்ததால் வனத்துறையினர் ஸ்ரீவாரி பாதாலு பகுதிக்கு செல்லும் வழியை மூடி பக்தர்கள் செல்ல அனுமதி மறுத்தனர்.

    தற்போது பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியில் யானைகள் நடமாடி வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பக்தர்கள் நடமாடும் பகுதிக்குள் யானைகள் வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  #Elephantmovement



    அஞ்செட்டி அருகே திருமுறுக்கல் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே திருமுறுக்கல் என்ற இடத்தில் கொண்டை ஊசி வளைவில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த பகுதி தேன்கனிக்கோட்டையில் இருந்து ஒகேனக்கல் செல்லும் முக்கிய சாலையாகும். இந்த வழியாக பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அந்த வனப்பகுதியில் ஒரு வாரமாக 15 யானைகள் இரவு பகலாக சுற்றித்திரிகின்றன. மேலும் யானைகள் கூட்டம் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி சாலைக்கு வருகின்றன. இதனால் இந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்றனர். அவர்கள் யானைகள் நடமாட்டம் குறித்து சாலையோரம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை பலகை வைத்தனர்.

    மேலும் யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டிட தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். யானைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். அஞ்செட்டி வனச்சரகர் தனபால் கூறுகையில் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் கிராமமக்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்ல வேண்டாம். யானைகள் நடமாட்டம் குறித்து கிராமமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் ஹாரன்கள் அடித்தும், முகப்பு விளக்கை எரியவிட்டும் செல்லவேண்டும். யானைகள் வரும் பகுதியை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று எச்சரித்தார். 
    கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குஞ்சப்பனை மாமரம் உள்பட சுற்றுவட்டார ஆதிவாசி கிராம பகுதிகளில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. தற்போது பலாப்பழம் சீசனாக இருப்பதால் பலா மரங்களில் ஏராளமான காய்கள் காய்ந்துள்ளன. எனவே பலாப்பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதியிலிருந்து காட்டு யானைகள் இந்த பகுதிகளுக்கு வந்து முகாமிட்டுள்ளன.

    மேலும் இந்த சாலையின் பெரும்பகுதி வனப்பகுதி வழியாகவே செல்வதால் ஆங்காங்கே யானைகள் சாலையை கடக்கும் வழித்தடங்களும் உள்ளன. எனவே பலாப்பழங்களை உண்ண வரும் யானைகள் அவ்வப்போது சாலையை கடப்பதும், சாலை வழியாக கும்பலாக நடந்து செல்வதும் வழக்கமாக உள்ளது.

    எனவே இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானைகள் நடமாட்டம் இருப்பதால் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் கூறுகையில், தற்போது குஞ்சப்பனை மாமரம், செம்மனாரை, கீழ்கூப்பு, மேல்கூப்பு உள்பட ஆதிவாசி கிராமங்களில் உள்ள பலாமரங்களில் தற்போது சீசன் காரணமாக பலாப்பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. பலாப் பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளி பகுதியிலிருந்து வந்து பலாப்பழங்களை உண்டு வருகின்றன.

    எனவே யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலை ஓரத்தில் பலாப்பழங்கள் விற்பனை செய்ய வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும் வாகனங்களில் செல்வோர் யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கவோ அல்லது செல்பி புகைப்படம் எடுக்கவோ முயற்சிக்க கூடாது.

    மேலும் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது யானைகள் சாலையை கடக்க நேர்ந்தால் சற்று நேரம் காத்திருந்து யானைகள் சென்ற பின்பே செல்ல வேண்டும். காற்று ஒலிப்பானை (ஏர்ஹாரன்) ஒலிக்க வைத்து யானைகளை மிரள வைத்தலை தவிர்க்க வேண்டும்.

    இதுமட்டுமின்றி ஆதிவாசி கிராம மக்கள் அதிகாலை நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் போது தனியாக செல்லாமல் ஒன்றாக செல்ல வேண்டும். வயதானவர்கள் துணைக்கு யாரையாவது அழைத்து செல்ல வேண்டும். இதனால் யானைகள் மனிதர்களை தாக்குவதை தவிர்க்க முடியும், என்று தெரிவித்தார்.
    ×